அரசு நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் பாராளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு
தேர்தல் புறக்கணிப்பு
கெங்கவல்லியில் அரசு நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் பாராளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூர் பேரூராட்சி, வீ. இராமநாதபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் சிதிலமடைந்த சாலையை 15 ஆண்டுகளாக சீர் செய்து தராத அரசு நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் பாராளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வீ. இராமநாதபுரம் காட்டுக்கொட்டாய் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் 15 ஆண்டுகளாக முறையான சாலை வசதி ஏற்படுத்தி தராத அரசு நிர்வாகத்தை கண்டித்து எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை(2024) புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.இது பற்றி பொதுமக்கள் தெரிவித்ததாவது.இந்த சாலை 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த சிதிலமடைந்த சாலையில் தான் பயணித்து வருகிறோம். விவசாய பொருட்கள் பால் பொருட்களை எடுத்து வருவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.பெண்களும் முதியோர்களும் இந்த சாலையில் பயணிக்கும் பொழுது இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. இது பற்றி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எங்களுக்கு சாலை வசதி சீர் செய்து தரவில்லை. பலமுறை மனு அளித்தும் பயன் தராத நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு சாலை வசதி வேண்டி, சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்பொழுது வந்து அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்து விட்டு சென்றனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் இன்னும் மாறவில்லை! யாரிடம் சென்று முறையிடுவது என்றும் தெரியவில்லை எங்களது கஷ்டத்தை புரிந்து கொள்ள எந்த அரசியல்வாதிகளும் அரசு நிர்வாகம் முன் வராதது எங்களுக்கு பெரும் வேதனை அளிக்கிறது. ஆகவே, இந்த பாராளுமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிப்பதாக தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
Next Story