கான்கிரீட் சாலையை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை
புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள், புதிய குடிநீர் குழாய் அமைப்பது, கான்கிரீட் சாலை அமைப்பது, தார் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்து சில மாதங்களாக நடைபெற்றது . இந்நிலையில் பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சாலை தரமற்ற முறையில் இருப்பதாக அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறும் பொழுது,பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. தரமான முறையில் அமைக்கப்படாததால், கான்கிரீட் சாலையிலிருந்து மண்புழுதி ஆகியவை எழுகிறது.வீடுகளில் அதிக அளவு மண், தூசி விழுகிறது. மேலும் வாகனங்கள் அதிகம் சென்று வருவதால் கான்கிரீட் சாலை பெயர்ந்து வருகிறது. இதனால் உள்ளே உள்ள ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவை வெளியே தெரிகிறது.புதிய சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. இது குறித்து வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் இவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே காங்கீரிட் சாலையை முறையாக தரமான முறையில் அமைத்து தர வேண்டும்,அல்லது புதிதாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர் . பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து கூறும் பொழுது, தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு தினங்களில் பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Next Story