கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை
பைல் படம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோயில்கள் நிறைந்த பகுதி. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாநில வாகனங்கள் வருகை எப்பொழுதும் நிறைந்து காணப்படும். மேலும் கும்பகோணம் - தஞ்சை நெடுஞ்சாலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், செல்போன் கடைகள், குளிர்பான கடைகள், பழைய மீன்மார்க்கெட் ஆகியவை உள்ளன. அதே போல் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வந்து மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, சீர்காழி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த சாலை வழியாக தான் சென்று வருகின்றன.
அதே போல் இந்த நெடுஞ்சாலையின் அருகே உள்ள உள் சாலைகளில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் தஞ்சை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படும். இந்த சாலையில் ஹாஜியார் தெரு பகுதியில் சமீபத்தில் தொடா்ந்து 2 முறைக்கு மேல் வெவ்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் புதிய குழாய்கள் பொருத்தும் சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை அந்த சாலை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை மாற்று வழிகளில் இயக்கப்பட்டு வந்தது. இந்த சாலையில் பைக்குகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த வழியாக ஒருசில அரசு மற்றும் தனியாா் பஸ்களும் மினிலாரிகளும் சென்று வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் குழாய்கள் அமைக்கப்பட்டு சாலை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை கனரக வாகனங்களை செல்ல அனுமதிக்ககூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், கும்பகோணம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. அந்த நேரங்களில் சிமெண்டு மணல் கலவை கொண்டு தயார் செய்யப்பட்ட ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தது. நாளடைவில் குழாய்கள் சேதமடைய தொடங்கியதால் சாலையில் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் சாலைக்கு வெளியே வந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய படி உள்ளது. இவ்வாறு அடிக்கடி சாலை உடைந்து விடுவதால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களும் பாதிப்படைந்தன. தற்போது சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினிலாரிகள் உள்ளிட்டவை இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இந்த சாலையில் பல்வேறு இடங்களில் குழாய்கள் சேதமடைந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வழியாக பணிகள் முழுவதும் முடியும் வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.