கழிவறையை திறக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் தொடர் வேண்டுகோள் ,போராட்டங்களை அடுத்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2021 ஆம் ஆண்டு நவீன பொது கழிப்பிடம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கழிப்பிடத்தை பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த கடை வியாபாரிகள் என பல்வேறு தரப்பு தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த பொதுக்கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பள்ளிபாளையத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளின் ஒரு பகுதியாக கழிப்பிடம் அருகிலேயே கழிவு நீர் சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், கழிவறைக்கு செல்லும் நீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கழிவறைக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறை பூட்டப்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளின் நலன் கருதி கழிப்பிடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். தினந்தோறும் தூய்மை பணியாளர்களைக் கொண்டு நகராட்சி கழிப்பிடத்தை பராமரிக்க வேண்டும். கழிவறைக்கு தேவையான போதிய அளவு நீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.