கருவேல மரங்களை அகற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை....
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் வெங்கடாபுரம், தெள்ளிமேடு, சாஸ்திரம் பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 1,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தெள்ளிமேடு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வீட்டுமனை பிரிவுகள் உள்ளன.
பல ஏக்கர் பரப்பளவில் காலியாக இருந்த மனைகள் முழுதும் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியுள்ளது. மேலும், இரவு நேரங்களில் மர்மநபர்கள் சிலர் மதுக்கூடமாகவும், கஞ்சா புகைக்கும் இடமாகவும் இந்த கருவேல மர புதர்களை பயன்படுத்தி வருகின்றனர். குற்றவாளிகள் தஞ்சமடையும் இடமாகவும் மாறியுள்ளது.
பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறும் இந்த கருவேல புதர்களில், இங்குள்ள கிராமங்களுக்கு தொடர்பில்லாத புதிய நபர்களின் நடமாட்டமும் உள்ளது. மேலும், கடந்த வாரம் இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் மற்றும் அடுத்தடுத்து உள்ள நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.