ஆமை வேக துப்புரவு பணியால் பொதுமக்கள் அதிருப்தி
செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் கழிவுகளை அகற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம்பிரிக்க வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதிலும் முறையாக துப்புரவு பணி செய்வதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் உள்ள குப்பைகள் பல நாட்களாக ஆங்காங்கே அப்படியே குமித்து வைக்கப்படுவதால் கொசு உற்பத்தி ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. பேரூராட்சிக்குட்பட்ட இடங்களில் கால்வாயில் அடைப்புகளை சரி செய்து கால்வாயின் ஓரம் கழிவுகள் வைக்கப்படுகிறது. ஆனால் பல நாட்களாக இந்த கழிவுகள் அகற்றப்படுவதில்லை.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. ராஜவீதி, மேலப்பாளையம், பெருமாள் கோவில் தெரு, மெயின் ரோடு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெருமாள் கோவில் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான குப்பைகளை சேர்த்து வைத்து அதனை அப்புறப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கோவிலுக்கு வந்து செல்லும் நபர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சுகாதார ஆய்வாளர், துப்புரவு பணி மேற்பார்வையாளர் உள்பட பேரூராட்சியின் அலுவலர்கள் இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என செங்கம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார, துப்பரவு பணிகளை உடனுக்குடன் செய்து சுகாதாரம் பேணி காத்திட மாவட்ட நிர்வாகிம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.