கூடுதல் அரசு பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பு !

கூடுதல் அரசு பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பு !
 அரசு பேருந்து
போதிய பேருந்து வசதி இல்லாமல் கூடுதல் அரசு பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சூணாம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான இல்லீடு, காவனுார், புத்திரன்கோட்டை, நுகும்பல் போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 30, 000த்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தொழிற்சாலை மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மதுராந்தகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கி போன்றவை செயல்படுவதால், சூணாம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் மதுராந்தகத்திற்கு வந்து செல்கின்றனர். சூணாம்பேடு முதல் மதுராந்தகம் வரை, தடம் எண் 'டி-9' அரசு பேருந்து இயக்கப்படுகிறது. காலை மற்றும் மாலை வேலைகளில், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், போதிய பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும், அபாயகரமான நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். விழாக்காலங்களில் பேருந்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் மற்றும் முதியோர் அவதிப்படுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சூணாம்பேடு - மதுராந்தகம் இடையே கூடுதல் அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story