குப்பம் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கைப்பு கூட்டம்.

குப்பம் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கைப்பு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், கரூர் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, குப்பம் கிராமத்தில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் மாவட்டத் துணை ஆட்சியர் கருணாநிதி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குப்பம் கிராமத்தில் செயல்படும் அன்னை ப்ளூ மெட்டல் நிறுவனத்தார், சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் கருத்துக்களை கேட்டனர். குப்பம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பொதுமக்கள் குவாரி அமைப்பதால் உள்ளூரில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர். அதே சமயம் சமூக ஆர்வலர்கள், தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதற்கு அதிகப்படியான கல்குவாரிகள் தான் காரணம். ஏற்கனவே இப்பகுதியில் பல்வேறு குவாரிகள் நிறுவப்பட்டுள்ளதால் இந்த புதிய கல்குவாரி தேவையற்றது என விளக்கம் அளித்தனர். பொதுமக்கள் அளித்த கருத்துக்களை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

Tags

Next Story