பட்டா வேண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட பொதுமக்களால் பரபரப்பு

அரூர் வீட்டுமனை நிலம் கேட்டு தாழ்த்தப்பட்ட மக்கள், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் தாழ்த்தப்பட்ட மக்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு சொந்தமாக வீடு கிடையாது. இதனால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் இன்று 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென்று திரண்டு தங்களுக்கு வீட்டுமனை நிலம் வழங்க வேண்டி அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டு வந்ததால் பரபரப்பு உருவானது.

கடந்த வாரத்தின் போது கூட குடியிருக்க வீடு இல்லாமல் வீட்டுமனை நிலம் கேட்டு அரசு புறம்போக்கு நிலத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்ட மக்கள் வருவாய்த் துறையினரிடம் இது புறம்போக்கு இடம். எங்களுக்கு இந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றனர்.அரசு புறம்போக்கு நிலத்தில் தனி நபர் ஒருவர் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இது குறித்தும் அப்போது புகார் எழுப்பப்பட்டது. இதனால் அந்த தனி நபருக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து வருவாய்த் துறையினர் இந்த நிலம் யாருடையது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு இது அரசு நிலம் தான் என கண்டறியப்பட்டால் 60 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில் வீடுகள் இல்லாததால் எங்களுக்கு அரசு நிலத்தில் பட்டா போட்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து ஆய்வு செய்து பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென கையில் மனுக்களுடன் வீட்டுமனை நிலம் கேட்டு திரண்டதால் பரப்பரப்பு நிலவியது.தகவலறிந்த வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் வருவாய் ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பிறகு மனுக்களை பெற்றனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பிறகு பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story