பயிர்களைக் காப்பாற்ற உயிர் நீர் வழங்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் 

பயிர்களைக் காப்பாற்ற உயிர் நீர் வழங்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் 
விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்பிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் மற்றும் தஞ்சாவூர் பகுதியில் பாசனம் பெறும் கல்லணைக் கால்வாய் மற்றும் ஆனந்தக் காவேரி, பிள்ளை வாய்க்கால் ஆகிய ஆறுகளில் வாய்ப்புள்ள இடங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது கல்லணையில் தண்ணீர் இருந்தும், நீர் வரும் பாதைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளதால், கடைசி ஒரு முறை தண்ணீர் இருந்தால், வாடும் பயிரை காப்பாற்றி விடலாம் என்று நம்பியிருந்த விவசாயிகளின் நிலை தற்போது பரிதாபத்திற்குரியதாக மாறி உள்ளது.

விளைந்துள்ள பயிரை காப்பாற்றி அறுவடை செய்திட, ஒரு முறை உயிர் தண்ணீர் கிடைத்தால் பயிர் தப்பித்து வரும் என்கிற நிலையில், கல்லணையின் வெகு அருகே உள்ள இந்தப் பகுதி விவசாயத்திற்கு உடன் தண்ணீர் வழங்கி, இதை நம்பியே உள்ள விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றிட நடவடிக்கை எடுத்து உதவி புரிய வேண்டும்.

இதேபோல் மாவட்டத்தில் தேவையான இடங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story