மாநாட்டிற்கு சென்ற வாகனங்களால் பொதுமக்கள் அவதி
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுங்கச்சாவடி அருகே புதிய திராவிட கழகம் மற்றும் வேட்டுவ கவுண்டர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்காக நாமக்கல், சேலம், கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், பெருந்திரளாக மாநாட்டிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து பெருந்துறைக்கு சென்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கல்லாங்காட்டு வலசு, குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் டிராக்டர், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம், மினி பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாநாட்டிற்கு செல்வதற்காக ஊர்வலமாக வெப்படை சாலையில் இருந்து குமாரபாளையம் பைபாஸ் சாலைக்கு வந்தனர்.
அப்பொழுது பொதுமக்களை, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டியபடியும், இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்தபடியும்,இருசக்கர வாகனத்தின் மீது நின்று கொண்டும்,காரின் இரண்டு புறமும் தொங்கிக்கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்தனர். மேலும் எதிர்சாலையில் வரும் அரசு பேருந்துகள் உள்ளிட்டவாகனங்களுக்கு வழி விடாமல் இடையூறும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உள்ளூர் போலீசார் அவர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் குமாரபாளையம் வட்டார பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.