பேராவூரணியில் திமுக நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் திமுக மூன்றாம் ஆண்டு சாதனை மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேராவூரணி எம்.எல்.ஏ நா.அசோக்குமார் தலைமை வகித்தார்.
தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா.அண்ணாதுரை, தொகுதி பார்வையாளர் நாகை மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பழஞ்சூர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன் வரவேற்றார். திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா சிறப்புரையாற்றி பேசுகையில், "ஒன்றிய அரசு தமிழக வளர்ச்சித் திட்டங்களை முடக்க நினைக்கிறது. ஆனால் திமுக அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. புதுமைப்பெண் திட்டம், தங்க மகன் திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் என ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. ஆட்சியின் சாதனைகளை சொல்லி ஓட்டுக்கேட்கும் தைரியம் திமுகவிற்கு மட்டும் தான் உள்ளது.
மோடி திமுகவை அழித்து விடுவேன் என்கிறார். திமுகவை அழிக்க நினைத்த யாரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை" என்று பேசினார். கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஒன்றியச் செயலாளர்கள் வை. ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், நகரச் செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.