கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

விருதுநகரில் கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


விருதுநகரில் கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் ஒரே பிரிவை சேர்ந்த மக்கள் கீழ்ப்பகுதி, மேல் பகுதி என இருவேறு தரப்பாக வசித்து வருகின்றனர். கடந்த 1953 ஆம் வருடம் கீழ்ப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக தனிநபர் ஒருவரிடம் இருந்து சுமார் 6 சென்ட் அளவுள்ள நிலம் கள்ள மாயன் வகையறா மூலம் பொது பயன்பாட்டுக்கு விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த சமயம் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிலத்தில் கடந்த 1979 ஆம் வருடம் 2 வணிக கடைகள் மற்றும் ஐந்து வீடுகள் கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தை யூ டி ஆர் சர்வே எனப்படும் நில அளவைத் துறையினர் கடந்த 1984 ஆம் வருடம் ஆய்வு செய்தபோது, பயன்படுத்தியவர்களிடம் தகவல் கூறாமல் புறம்போக்கு நிலம் என பதிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்தப் பதிவை ஆதாரமாகக் கொண்டு அக்கிராமத்தின் மேல் பகுதியில் வசிக்கும் ஒரு தனி நபர், புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதாக கூறி கட்டடத்தை இடிக்க அரசு மூலம் முயற்சி செய்து வருகிறார்.

இதை அறிந்த கீழ்ப்பகுதியைச் சேர்ந்த கள்ள மாயன் வகையறா மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த தனி நபரின் தூண்டுதலின் பேரில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே கிரைய நிலத்தில் உள்ள கட்டடங்களை இடிப்பதற்காக கடந்த மாதம் வருவாய் துறையினர் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து கட்டிடங்களை இடிக்கும் முயற்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டிய சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த 200 பெண்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

இதனால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நிலம் குறித்து வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் வரை கட்டடங்களை இடிக்க கூடாது. கட்டடங்களை இடிப்பதற்காக வழங்கப்பட்ட நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என கோரி 50க்கும் மேற்பட்ட மனுக்களை ஆதாரத்துடன் துணை வட்டாட்சியர் அப்பா துரையிடம் பொதுமக்கள் வழங்கி உள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் சுந்தரராஜபுரம் பகுதி மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story