வீட்டில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் !

சங்ககிரி: இலங்கணசாலை நகராட்சியில் வீட்டில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி சின்ன ஏரி பகுதியில் தமிழக அரசு சார்பில் 8.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை நடைபெற்றது. இவ்விடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் இப்பணியை தொடங்கியபோது அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 60 அடி உயரம் கொண்ட உயர்மின் கோபுரத்தின் மீது மேலே ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் பணி துவங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டியும், தங்களது வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டியும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags

Next Story