மக்கள் தொடர்புத் திட்ட முகாம் - 215 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்குட்பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தில், பெரம்பலூர் மாவட்டம் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது, கலைஞர் மகளிர் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த நபர் விடுபட கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகம் கவனமாக செயல்பட்டு வருகிறது. எனவே உண்மையாக தகுதி இருக்கும் நபர்கள் விடுபட்டிருந்தால் இ-சேவை மையத்தின் மூலமாக மேல்முறையீடு செய்யலாம். அப்படியும் மேல்முறையீடு செய்ய முடியவில்லை என்றால் கிராம நிர்வாக அலுவலர் தொடர்பு கொண்டு மேல்முறையீடு செய்து கொள்ளலாம். கல்வி பயில்வதற்கு குடும்ப பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக கல்லூரிகளிலேயே கல்வி கடன் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 500 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. விண்ணப்பித்த அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்பட உள்ளது. குழந்தைகள் கல்வி பயில குடும்ப சூழ்நிலை பொருளாதாரம் ஒரு தடையாக இருக்குமானால் அந்தத் தடையை நீக்குவதற்கு எப்போது வேண்டுமானாலும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக அரசுத்துறைகளின் திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில், வருவாய்துறையின், சமூக பாதுகாப்புத் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை , கூட்டுறவுத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை தொழிலாளர் நலத்துறை ,மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் மொத்தம் 215 பயனாளிகளுக்கு ரூ.90,47,521 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் பொருப்பில் உள்ள சத்தியபால கங்காதரன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மீனா அண்ணாதுரை, உதவி ஊராட்சிகள் இயக்குநர் அருளாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், ஸ்டாலின்செல்வகுமார், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம் மற்றும் அரசுதுறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
