குடிநீர் விநியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

ஊட்டி, லவ்டேல் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊட்டி - மஞ்சூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை பொய்த்ததால் இந்தாண்டு நான்கு மாதங்களுக்கும் மேலாக, கடும் வெயில் காரணமாக ஊட்டி நகர பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவுள்ள பார்சன்ஸ்வேலி, மார்லி மந்து, டைகர் ஹில் உள்ளிட்ட தடுப்பணைக்ள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் அளவு குறைந்து வருவதால் ஊட்டி நகரில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் ஊட்டி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட லவ்டேல் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் லவ்டேல் காவல் நிலையம் முன்பு காலி குடங்களுடன் ஊட்டி மஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் போராட்டம் கைவிடப்பட்டது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கள் கிராமப் பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படாததால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும் இது தொடர்பாக லவ்டேல் காவல் நிலையம் மற்றும் ஊட்டி நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதேபோல் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் அனைத்திற்கும் 3500 ரூபாய் செலுத்தி குடிநீர் குழாய் இணைப்பு செய்யப்பட்டுள்ளதோடு, நகராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் வரி உள்ளிட்டவைகள் முறையாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால் தங்கள் கிராமப் பகுதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story