ஒரநள்ளியில் பொதுமக்கள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் செல்பி பாயிண்ட் அமைத்தல், பழங்குடியின மக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டது. நீலகிரி தொகுதியில் வாக்குப்பதிவுக்கு முந்தைய ஒரு சில நாட்களில் பலருக்கும் இரண்டு இடங்களில் வாக்கு இருப்பது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாவட்டத்தில் பல இடங்களில் பலருக்கும் ஓட்டு இல்லாமல் போனது வாக்குப்பதிவு நாளான இன்று தெரியவந்தது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தங்காடு ஓரநள்ளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 207, மற்றும் 208 என இரண்டு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் 207-வது வாக்கு சாவடியில் 683 வாக்காளர்களும், 208-வது வாக்கு சாவடியில் 366 வாக்காளர்களும் இருந்தனர். இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பலரும் வந்து வாக்களித்தனர். மதியம் வாக்களிக்க வந்த ஒரு சிலருக்கு முதலில் வாக்கு இல்லை என கூறப்பட்டது. இதற்கிடையே ஓரநள்ளியை சேர்ந்த சுமார் 200 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு உள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் வாக்களிக்க முடியாது என தேர்தல் அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஓரநள்ளியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலின் பெயரில் ஊட்டி ஆர்.டி.ஓ., மகராஜ், ஊட்டி ஊரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலில் வாக்கு இருந்த 200 பேருக்கு இந்த தேர்தலில் வாக்கு இல்லாமல் போனது எப்படி என்று பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதேபோல் ஊட்டி கேத்தி அடுத்த பாலாடா பகுதியில் 28 பேருக்கு வாக்கு இல்லாமல் போனது. இதையடுத்து அவர்களும்,
அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இதேபோல் கண்ணேரி மந்தனையில் சுமார் 50 பேருக்கு வாக்கு இல்லை என்று கூறப்பட்டதாக கூறி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே வாக்காளர் பட்டியலில் நடந்த குளறுபடிகளை அடுத்த தேர்தலுக்குள் சரி செய்ய வேண்டும் என ஒட்டு மொத்தமாக பொதுமக்கள் தெரிவித்தனர். .....