காங்கேயம் அருகே கேரளா கழிவுகள் ஏற்றி வந்த லாரியை 2வது நாளாக பொதுமக்கள் சிறைபிடிப்பு

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்து கொட்ட வந்த லாரியை 2வது நாளாக பொதுமக்கள் சிறை பிடித்தனர். அபராதம் விதிக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தனியார் இடத்தில் கழிவுகளை  கொட்டுவதற்கு லாரி பொக்லைன் இயந்திரமும் வந்துள்ளது. இரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
வீரணம்பாளையம், பொத்தியபாளையம், அறுதொழுவு ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் காங்கேயம் தாசில்தார், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊதியூர் காவல் நிலையம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் உடனடி நடவடிக்கையாக வெளி மாநில குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டிய இடத்தில் இருந்து திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் காங்கேயம் பகுதியில் இது போன்ற வெளிமாநிலக் கழிவுகளை இனி கொட்ட கூடாது எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டதை அடுத்து நேற்று காலை வீரணம்பாளையம் பொத்தியபாளையம் அறுதொழுவு ஆகிய பகுதிகளில் கொட்டப்பட்ட கழிவு பொருட்களை மீண்டும் லாரியில் எடுத்துச் சென்று தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து ஆரத்தொழுவு ஊராட்சி தலைவர் கூறுகையில் வெளி மாநில கழிவுகளை இரவோடு இரவாக தமிழ்நாட்டில் உள்ள சிறு சிறு கிராமங்களில் மேலும் தனி நபருக்கு சொந்தமான நிலத்தில் கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்ற கழிவுகள் கொட்டுவதால் நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதற்கு அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என்றார்.

Tags

Next Story