பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது.
மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா, துணை ஆணையர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அதிமுக மாமன்ற குழு தலைவர் அம்பிகாபதி பேசுகையில், திருச்சி விமான நிலையம் 65வது வார்டு வயர்லெஸ் சாலையில் உள்ள குடியிருப்பு மனை, வீடு உள்ளிட்டவற்றை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இந்தப் பகுதிகளில் கட்டடம் கட்ட மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, வரி விதிப்பு ஆகியவை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் குடியிருப்பு வீடு மற்றும் மனைக்காண பட்டாவும் வைத்துள்ளனர்.
ஆனால் ஏதோ அரசு உத்தரவு காரணமாக பத்திர பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் கடந்த 6 மாத காலமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் திருச்சி மாவட்ட ஆட்சியர் மூலம் இப் பிரச்சனைக்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டில் காமராஜ் நகரில் ரூ.1.15 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை இது மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆகையால் இந்த மருத்துவமனை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கோரிக்கையை ஏற்று திருச்சி விமான நிலையம் முதல் புதுக்கோட்டை சாலையில் மாநகராட்சி எல்லை வரை சென்டர் மீடியனில் 30 தெருவிளக்கு ரூ.52 லட்சம் செலவில் அமைத்துக் கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாநகராட்சி நகர பொறியாளர் பணியிடத்தில் பொறுப்பு அதிகாரி பணியாற்றி வருகிறார். அவருக்கு உரிய அதிகாரம் இல்லாததால் மாநகராட்சி பகுதிகளில் பணிகளில் நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது. ஆகையால் உடனடியாக நகரப் பொறியாளர் பணியிடத்தில் நிரந்தரமாக பணியமர்த்தி அவருக்குரிய அதிகாரத்தை கொடுத்து பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.