பொதுநல ஆர்வலர் சமூக செயற்பாட்டாளர் அய்யா சம்பந்தம் மறைவு

பொதுநல ஆர்வலர் சமூக செயற்பாட்டாளர் அய்யா சம்பந்தம் மறைவு

பொதுநல ஆர்வலர் சமூக செயற்பாட்டாளர் அய்யா சம்பந்தம் மறைவுக்கு தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


பொதுநல ஆர்வலர் சமூக செயற்பாட்டாளர் அய்யா சம்பந்தம் மறைவுக்கு தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஆழ்ந்த இரங்கல் திருவையாறு அடுத்த புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை உழவர், பொதுநல ஆர்வலர் சமூக செயற்பாட்டாளர் அய்யா சம்பந்தம் (98) அவர்கள் மறைவு உழவர் சமூகத்திற்கு சமூக நல ஆர்வலர்களுக்கு மிகப்பெரும் பேரிழப்பு. டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் நிறுவனர் திரு. அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில் முதல் கட்டமாக துவங்கிய விவசாயிகள் போராட்டத்தில் எங்களுடன் கலந்து கொண்டு போராட்டம் நிறைவு நாள் வரை இருந்ததோடு மட்டுமல்லாமல் போராட்டத்தை நிறைவு செய்ய வேண்டாம் தொடர்ந்துப் போராடுவோம் என்று உறுதிபட தெரிவித்து கடைசி நாள் வரை கலந்து கொண்டவர்.

சமூக பொதுநல அக்கறையுடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகளை தொடர்ந்து அதில் வெற்றியும் கண்டவர். திருவையாற்றில் புதிய நீதிமன்ற கட்டிட வளாகம் கட்டி பணிகள் முடிக்கப்பட்டு ஆண்டு கணக்கில் திறக்கப்படாமல் இருந்த பொழுது பொதுநல நோக்கி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து திருவையாறு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு பல்வேறு அரசியல் காரணங்களால் திறக்கப்படாமல் இருந்த பல நீதிமன்றங்களையும் திறப்பதற்கான வழிவகைகளை அவருடைய வழக்கின் மூலமாக தீர்வு கிடைக்கப் பெற்று புதிய நீதிமன்றங்கள் கட்டிடங்கள் திறக்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டு டெல்லியில் இந்திய அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் இந்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வான் அவர்களை சந்திக்கச் சென்று அவர் அவசர பணி நிமித்தமாக பீகார் மாநில வெள்ள பாதிப்பை பார்க்க சென்று விட்டதால் திரு சம்பந்தம் ஐயாவும் குடந்தை திரு ஆதி.கலிய பெருமாள் லால்குடி திரு. மனோகரன் மற்றும் நானும் வட இந்திய உழவர் அமைப்பின் தலைவர் திரு வி எம் சிங் அவர்கள் துணையுடன் இந்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் துணை அமைச்சர் திரு சஞ்சீவ் குமார் பாலிவான் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு கட்டுப்பாடுகள் சட்டம் 1966 பிரிவு5ஏ -ன்கீழ் வழங்கப்படாமல் இருக்கின்ற கரும்பிற்கான கூடுதல் விலை சுமார் ரூபாய் 200 கோடிகளை உடனடியாக வழங்கிட நடவடிக்கை வேண்டுமென நேரில் வலியுறுத்தினோம்.

மிகத் துணிச்சலாக தைரியமாக தவறு செய்கின்ற மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட துறை அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி கட்டி கேட்கின்ற தனித்துவ தைரியமான உழவராக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர். மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக பொதுநல வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார் என்ற காரணத்திற்காக அப்பொழுது இருந்த மாவட்ட ஆட்சியர் திரு சம்பந்தன் ஐயா அவர்களை தனது அறைக்கு தனியே அழைத்து மிரட்டிய பொழுது உன்னால் முடிந்ததை பார் என்னால் முடிந்ததை காட்டுகிறேன் என்று சொல்லி சவால் விட்டு மிக தைரியமாக அந்த மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றத்தின் மூலமாக பாடம் கற்பித்தவர்அய்யா திரு சம்பந்தம். ஊழலுக்கு எதிரான இயக்கத்தை( JAN LOKPAL) முன்னெடுத்த அண்ணா ஹசாரே அவர்களின் எட்டரை நாட்கள் தொடர் பட்டினி போராட்டத்தில் நானும் அணைக்குடி திரு அய்யாறப்பன் அவர்களும் டெல்லி சென்று ஜன்தர் மந்தரில் பங்கேற்று திரும்பியவுடன், ' தான் டெல்லி வரை இல்லாமல் போய்விட்டது எனவே அண்ணா ஹசாரே அவர்களை நேரில் சென்று பாராட்டி விட்டு வர வேண்டுமென' சொல்லி என்னுடன் மராட்டிய மாநிலத்தில் அண்ணா ஹசாரே அவர்களின் சொந்த கிராமமான ரிலேகான் சித்தி என்ற கிராமத்தில் அண்ணா ஹசாரே அவர்களை சந்தித்து 3 நாட்கள் அவருடைய ஆசிரமத்தில் பயிற்சி பட்டறையில் நானும் அவரும் தங்கி கலந்துகொண்டு ஊர் திரும்பினோம்.

மற்றொரு நிகழ்வில் டெல்லியில் இந்திய அரசின் துறை அலுவலர்களுக்கு நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயிற்சியில் கருத்துரையாளராக என்னுடன் கலந்து கொண்டு தன்னுடைய பொதுநல முயற்சிகளை பற்றி அலுவலர்களுடன் கருத்துக்களை அய்யா திரு சம்பந்தம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு அங்கிருந்த அலுவலர்களால் பாராட்டப்பட்டார். இயற்கை வளத்தை காப்பாற்றுங்கள் மணல் கொள்ளையை தடுத்திடுங்கள் என்று பலமுறை மாவட்ட ஆட்சியர் நடத்துகின்ற விவசாயிகள் குறித்த கூட்டத்தில் ஓங்கி ஒலித்தவர் தஞ்சை மாவட்ட ,அண்ணல்அய்யா திரு சம்பந்தம் அவர்கள். வெல்லம் தயாரிப்பில் சீனி சர்க்கரை கலப்படம் செய்யப்படுகிறது என்பதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. நீர் நிலைகளில் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்பதற்காக இயற்கை ஆர்வலராக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார். தனது இறுதி மூச்சு வரை ஒவ்வொரு வினாடியும் பொது நலனில் மட்டுமே சிந்தனையோடு அக்கறையோடு வாழ்ந்த அண்ணல் அய்யா திரு. சம்பந்தம் அவர்கள் என்றென்றும் நம்மோடு வாழ்கிறார்.

எங்கள் சங்கத்திற்கு அறிவுரையாளராக ஆலோசகராக அவர் இருந்தார் எப்பொழுதும் இருக்கிறார். வாழ்க அவர் புகழ் ! அவரின் ஆன்மா அமைதி அடையட்டும். அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கிறேன். சுவாமிமலை சுந்தர விமல் நாதன் செயலர் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் தலைவர் தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்கம். 63 800 91 465

Tags

Next Story