ஓங்காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

ஓங்காளியம்மன்


சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி சரபங்கா நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இதனையடுத்து பிப்ரவரி 17 ம் தேதி கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இவ்விழாவிற்காக இன்று முதல் 15 நாட்களுக்கு பக்தர்கள் விரதம் இருந்து தினந்தோறும் ஓங்காளியம்மனுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்ய உள்ளனர்.
இதனையெடுத்து தீமிதி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக (மார்ச் 1ம்) தேதி வெள்ளிக்கிழமை விரதமிருந்த பக்தர்கள் கல்வடங்கம் காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடம் எடுத்துக்கொண்டு முக்கிய கிராமங்களின் வழியாக கோவில் சன்னதி வந்தடையும். இதனையடுத்து ஓங்காளியம்மன் உற்சவமூர்த்தி செட்டிபட்டி கோவில் வீட்டிலிருந்து சப்பாரத்தில் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா வந்து சரபங்கா நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோவிலை வந்தடையும்.
இதனைத் தொடர்ந்து (மார்ச் 2ம்) தேதி சனிக்கிழமை விரதம் இருந்த பக்தர்கள் சரபங்கா நதிகரைக்குச் சென்று மஞ்சள் நீராடி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்திய பின்னர் கோவில் வளாகத்தின் முன்பு பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியட்டும் மாவிளக்கு தட்டத்துடன் கோவிலை சுற்றி வந்து வழிபாடு செய்வார். தொடர்ந்து (மார்ச் 3ம்) தேதி ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று முக்கிய வீதிகளின் வழியாக ஓங்காளியம்மன் உற்சவமூர்த்தி சுவாமி கோவில் வீட்டுக்கு சென்றடையுள்ளது குறிப்பிடத்தக்கது.



