புலியூரான் கிராமத்தில் கருத்து கேட்பு கூட்டத்தில் அடி உதை
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கைகலப்பு
அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் புதிதாக சுமார் 11 ஹெக்டேர் பரப்பளவில் கல்குவாரி அமைக்க விஷ்ணு சூர்யா என்ற நிறுவனம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக கருத்து கேட்பு கூட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு தலைமை வகித்தார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார்.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவராக தங்களது கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். சிலர் எதிராகவும் சிலர் ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி என்பவர் கல்குவாரிக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஒரு சில அங்கிருந்து பாய்ந்து வந்து கோட்டாட்சியர் இருக்கும்போதே அவர் முன்னிலையில் குருசாமியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கோட்டாட்சியர் முன்னிலையில் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து போலீசார் மண்டபத்திற்குள்ளே விரைந்து வந்து அனைவரையும் எச்சரிக்கை செய்தனர்.
பின்னர் மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. மேலும் சிலர் நேரடியாகவும் தங்களது கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியிடம் வழங்கினர். இந்த கருத்து கேட்பு கூட்டம் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அனுப்பப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து கல் குவாரிக்கு உரிமம் வழங்குவதா கூடாதா என மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் முடிவு செய்யும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கருத்து கேட்பு கூட்டத்தில் திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.