பூத்தப்பேடு பிரதான சாலை கரடுமுரடாக மாறியதால் அவதி
சாலையை சீரமைக்க கோரிக்கை
சென்னை, வளசரவாக்கம் மண்டலம் போரூர், 151வது வார்டில், பூத்தப்பேடு பிரதான சாலை உள்ளது. மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை, தற்போது மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது. இது மவுன்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ராமாபுரம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இச்சாலையில் பாதாள சாக்கடை அமைக்க, பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிந்தும் சாலை முறையாக சீர் செய்யப்படவில்லை. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் இச்சாலையில் உள்ள பாதாள சாக்கடை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்நிலையில், சாலையில் பல இடங்களில் 'மெகா' பள்ளங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, பாதாள சாக்கடை மேல் மூடி மற்றும் குழாயை சீர் செய்யும் பணிகள், கடந்த ஆறு மாதங்களாக நடந்தன. மந்தமாக நடந்த சீரமைப்பு பணியால், பகுதிமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், குடிநீர் வாரிய பணிகள் முடிக்கப்பட்டு, சாலையில் உள்ள பள்ளங்கள் மூடப்பட்டன. ஆனால், சாலையை முறையாக சீர் செய்யவில்லை. அத்துடன், பள்ளத்தை சீர் செய்ய பயன்படுத்திய இரும்பு தடுப்புகள், சாலையில் குவிக்கப்பட்டு உள்ளன. எனவே, சாலையை முறையாக சீர் செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.