மதுபோதையில் தகராறு - ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்
பைல் படம்
பாபநாசத்தில் விவசாயிகளிடம் மதுபோதையில் தகராறு செய்த ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
டெல்லி எல்லையில் போராடும் விவசாயி களுக்கு ஆதரவாக, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இரு தினங்களுக்கு முன்பு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் மணி(35) மதுபோதையில் விவசாயிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து, காவலர் மணியை அங்கிருந்த போலீஸார் அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இதுகுறித்து எஸ்.பி. ஆசிஷ் ராவத் விசாரணை நடத்தி காவலர் மணியை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார். ஏற்கெனவே இவர் பேராவூரணி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, அங்கு மது அருந்திவிட்டு பணிக்கு வந்ததால், ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story