வாக்குச்சாவடியில் ரகளை - பாமகவினர் கைது
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள டி.கே.மண்டபம் அரசு ஆரம்பப் பள்ளியில் நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மாலை 4.30 மணி அளவில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் பாமகவினர் அத்துமீறி வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்குள்ள நாற்காலிகளை உடைத்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து அங்கு சென்ற காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் கொண்ட போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதில் ஜோதிலிங்கம் என்பவர் போலீசாரிடம் ஒருமையில் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் காவல் ஆய்வாளர் பாலாஜி ஜோதிலிங்கத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது ஜோதிலிங்கத்தின் தந்தை ராஜேந்திரன், சகோதரர் சத்தியநாராயணன், மற்றும் பாமக நிர்வாகி ஜெயராமன் காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, போலீசாருக்கும் பாமகவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று போலீசார் நான்கு பேரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர் . இதனை அறிந்த பாமகவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு நான்கு பேரை விடுவிக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.டி. எஸ்.பி கோமதி பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்து பதில் தெரிவிப்பதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து பாமகவினர் கலைந்து சென்றனர். பின்பு ஜோதிலிங்கம் சத்தியநாராயணன், ராஜேந்திரன், ஜெயராமன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஜோதிலிங்கம், ஜெயராமன் ஆகிய இரண்டு பேரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் பாமகவினர் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது.