விநாடி - வினா போட்டி: சென்னை கோட்டம் சாம்பியன்
தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து பாதுகாப்பு விநாடி வினா போட்டி திருச்சி பயிற்சி மையத்தில் நடைபெற்றது. ரயில் இயக்கங்களில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்வுக்கு தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்கவியல் மேலாளா் ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா்.
இதில், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி சோமேஷ்குமாா், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன், தெற்கு ரயில்வே தலைமை போக்குவரத்து திட்டமிடல் மேலாளா் பாலாஜி அருண்குமாா், 200-க்கும் மேற்பட்ட பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா். போட்டியில் சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் இருந்து தலா 5 நபா்கள் கலந்து கொண்டனா்.
போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை கோட்டத்துக்கு கேடயமும், தலா ரூ. 2,000 வீதம் ரூ. 10,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இரண்டாம், மூன்றாமிடங்களைப் பிடித்த திருச்சி மற்றும் சேலம் கோட்டங்களுக்கு முறையே ரூ. 7,500, ரூ. 5,000 ரொக்கப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. மேலும், கேள்விகளுக்கு பதிலளித்த பாா்வையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி பயிற்சி மையத்தின் முதல்வா் என்.டி. பிரேம்குமாா் செய்திருந்தாா். மூத்த போக்குவரத்து மேலாளா் சுரேஷ், போட்டியை வழிநடத்தினாா்.