போட்டியில் பேருந்துகள் விபத்து - பயணிகள் வாக்குவாதம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பயணிக்க ஏராளமான அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் கல்லுப்பட்டி டிப்போவில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது பின் நோக்கி வந்த விருதுநகர் டிப்போவில் உள்ள அருப்புக்கோட்டை செல்லும் அரசு பேருந்தை ஓட்டுனர் அதிவேகமாக ஓட்டி வந்து மதுரை செல்லும் அரசு பேருந்து பின்புறத்தில் மோதியதில் இரண்டு பேருந்துகளும் சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு உயிர்சேதமோ,காயமோ ஏற்படவில்லை. மேலும் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த பயணிகள் அலறி அடித்து செய்வது அறியாமல் உயிர் பலி அச்சத்தில் திகைத்து நின்றனர்.இந்த விபத்து குறித்து இரண்டு அரசு பேருந்து ஓட்டுனர்களும், நடத்துனர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பயணிகளை வெகு நேரமாக காக்க வைத்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இரண்டு பேருந்துகளும் ராஜபாளையத்தில் இருந்து அடுத்தடுத்து கிளம்பியதாகவும் பயணிகளை அதிகமாக ஏற்றுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு வந்ததாகவும் இதனால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உயிர் அச்சத்தை ஏற்படுத்திய இரண்டு அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் நடத்துனர் மட்டும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களது பயணச்சீட்டுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரசு பேருந்து நடத்துனர்கள் ஓட்டுநர்கள் பணத்தை திருப்பி தராததால் ஆத்திரமடைந்து திட்டியவாறு தனியார் பேருந்தில் பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகள் அதிவேகாமக செல்லாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பயணிகளின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.