இஸ்லாமிய ஜமாத்தில் ராதிகா சரத்குமார் வாக்கு சேகரிப்பு
விருதுநகர் இஸ்லாமிய ஜமாத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். மேலும் ராதிகா சரத்குமார் மற்றும் அவரது கணவர் சரத்குமார் ஆகிய இருவரும் நாடாளுமன்ற தொகுதியில் ஒவ்வொரு பகுதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் விருதுநகரில் உள்ள பெரிய பள்ளிவாசல் மற்றும் கல் பள்ளிவாசலில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பொது மக்களை சந்தித்து விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் அவரது கணவர் சரத்குமார் ஆகிய இருவரும் தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் கிழக்கு பாஜக மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் அப்போது இஸ்லாமிய பெருமக்கள் முன்பாக பேசிய பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார் நான் பிறந்தது சென்னை யாக இருந்தாலும் என்னை வளர்த்தது இலங்கையில் உள்ள இஸ்லாமிய குடும்பம் தான் என்றார். மேலும் சமீபத்தில் என்னை வளர்த்த முஸ்லிம் தாயார் உயிரிழந்தார். நானும் உங்கள் குடும்பம் தான். இஸ்லாம் மார்க்கத்தில் கடைபிடிக்கப் படும் மரபுகள் எனக்கு நன்றாகத் தெரியும் என்றார் மேலும் பேசிய ராதிகா சரத்குமார் சமீபத்தில் துபாய் அபுதாபிக்கு முஸ்லிம் நண்பர்கள் அழைப்பின் பேரில் சென்று இருந்தேன். அங்கு அவர்கள் இந்து கோயிலுக்கு அழைத்துச் சென்று என்னை வழிபட வைத்தனர். இது எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. எனக்கு எல்லா மதமும் ஒன்றுதான். நான் கற்றுக் கொண்டது அன்பு பாசம் தான். நான் அரசியலுக்கு வந்தது நல்லது செய்வதற்காகத் தான் என்றார் மேலும் சென்னையை விட்டு .விட்டு தற்போது விருதுநகரில் நிரந்தரமாக வசிக்க ஏற்பாடு செய்து வருகிறேன். உங்களது பிரச்சினைகளை எதுவாக இருந்தாலும் தீர்த்து வைக்க முயற்சி செய்வேன். எனக்கான ஒரு வாய்ப்பு வழங்கினால் அனைத்து வசதி களையும் விருதுநகருக்கு கொண்டு வருவேன் என பேசினார். மேலும் அப்போது அருகில் இருந்த பள்ளிவாசலில் பாங்கு தொழுகை ஆரம்பித்ததால் நடிகை ராதிகா பேச்சை நிறுத்தி அமைதியாக நின்றார். அதன் பின்னர் இஸ்லாமிய பெண்கள் ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.