பி நல்லாகவுண்டன்பட்டியில் ராகி கொள்முதல் நிலையம் - ஆட்சியர்
சேலம் மாவட்டம், ஓமலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ராகி பயிரிடும் விவசாயிகள் அதிகளவில் உள்ளதால் ஓமலூர் பகுதியில் ராகி நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பி நல்லாகவுண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி ராகி கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் ராகி ஒரு குவிண்டால் 3846 ரூபாய்க்கும், ஒரு கிலோவிற்கு 38 ரூபாய் 46 காசுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட உள்ளது என்றும், அப்படி கொள்முதல் செய்யப்படும் ராகிக்கு உரிய தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் எவ்வித பிடித்தம் இல்லாமல் நேரடியாக செலுத்தப்படும் எனவும், இதனை ஓமலூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த ராகியினை நேரடி கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்து பயன் பெறுமாறும் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 99445 76870, 99944 72138 மற்றும் 94431 18108 என்ற எங்களில் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல் தெரிவித்துள்ளார்.