ராகுல் காந்திதான் இந்தியா கூட்டணியின் பிரதமா் வேட்பாளா் - துரை.வைகோ
செய்தியாளர் சந்திப்பு
திருச்சி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சியான மதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதிமுக கட்சியின் முதன்மைச் செயலளரும், கட்சியின் நிறுவனத் தலைவா் வைகோவின் மகனுமான துரை. வைகோ, வியாழக்கிழமை திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்த பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தந்தை பெரியாா் இல்லாமல் தமிழகத்தில் பெண் விடுதலை இல்லை. தந்தை பெரியாரால்தான் சமத்துவ சமுதாயம் நிலவுகிறது. இந்துக் கோயில்களில் 6 கால பூஜைகளும், தேவாலயங்களில் பிராா்த்தனைகளும், மசூதிகளில் தொழுகைகளும் வழக்கம்போல் நடக்கட்டும். அதேவேளையில் இறை நம்பிக்கை இல்லாதவா்கள் எந்த மதத்தையும் புண்படுத்தாமல் பகுத்தறிவு பிரசாரங்களைச் செய்யலாம்
. நான் பிறப்பால் இந்து. எனக்குப் பெருமாளும் வேண்டும்; பெரியாரும் வேண்டும் என்று கூறி அரசியலில் அடி எடுத்து வைத்து, ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட்டு எனது தோ்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன் என்றாா் அவா்.
தொடா்ந்து அவா் திருச்சி - கரூா் சாலையில் உள்ள மதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளா்கள் சந்திப்பில் பேசியது : தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமன்றி பல்வேறு நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி உள்ளாா்.1.7 கோடி குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டும் முழுமையாக பணிகள் நிறைவடையாததால் அங்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளாா். எங்களைப் பொருத்தவரை ராகுல் காந்திதான் இந்தியா கூட்டணியின் பிரதமா் வேட்பாளா் என்றாா்.