பேராவூரணியில் ரயில் மறியல் போராட்டம் எதிரொலி:சமாதானப் பேச்சு வார்த்தை

பேராவூரணியில் ரயில் மறியல் போராட்டம் எதிரொலி:சமாதானப் பேச்சு வார்த்தை
சமாதானப் பேச்சுவார்த்தை
பேராவூரணியில் ரயில் மறியல் போராட்டம் எதிரொலியாக சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். பயணச்சீட்டு முன்பதிவு மையம் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கவிருந்த ரயில் மறியல் போராட்டம் சமாதான பேச்சுவார்த்தையால் தள்ளி வைக்கப்பட்டது.

காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள், பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்லாததால் வியாபாரிகளும், பொதுமக்களும், கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பும் இணைந்து ரயில் மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி தலைமையில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரிதிவிராஜ் செளகான், தென்னக ரயில்வே திருச்சி கோட்ட உதவி இயக்கவியல் மேலாளர் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நகர வர்த்தக கழகத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் திருப்பதி, பொருளாளர் சாதிக் அலி, கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர் .

பொதுமக்கள் தரப்பில், "காரைக்குடி -திருவாரூர் வரையிலான ரயில் வழித்தடம் சுதந்திரத்திற்கு முன்பு, ஆங்கிலேயர்கள் காலத்தில் கிழக்கு கடற்கரையைச் சேர்ந்த டெல்டா பகுதி மக்களுக்காக போடப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் பாதையாகும். இந்த வழித்தடத்தில் சென்னைக்கும் ராமேஸ்வரத்திற்கும் ரயில் இயக்கப்பட்டு தினசரி ஏராளமான பொதுமக்கள் சென்று வந்து கொண்டிருந்தனர்.

பேராவூரணி ரயில் நிலையம் ரயில்கள் கிராஸிங் செய்யும் ரயில் நிலையமாகவும், ரயில் இன்ஜின்களுக்கு தண்ணீர் பிடித்து செல்லும் நிலையமாகவும் இருந்து வந்தது. கடைவீதியின் மையப்பகுதியில் ரயில்நிலையம் அமைந்துள்ளதால் ஒவ்வொரு ரயில் நின்று செல்லும்போதும் பயணிகளால் கடைவீதி வியாபாரம் நன்றாக நடந்து வந்தது.

காரைக்குடி - திருவாரூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக 2006 ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த அகல ரயில் பாதை பணிக்காக 2012 ஆம் ஆண்டு முதல் திருவாரூர்- காரைக்குடி இடையே இயங்கி வந்த பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டன. ரயில் சேவை இல்லாததால் காரைக்குடி, அதிராம்பட்டினம் கல்லூரிகளுக்கு சென்று வந்த மாணவர்களும் சென்னைக்கு வியாபாரம் தொடர்பாக சென்று வந்து கொண்டிருந்த வியாபாரிகளும் பல்வேறுபட்ட இன்னல்களை அனுபவித்து வந்தனர்.

பத்தாண்டுகள் ரயில் சேவையின்றி இருந்த நிலையில், கடந்த ஆண்டு பலகோடி ரூபாய் செலவில் அகல ரயில் பாதை அமைத்து, ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்ட நிலையில் பேராவூரணி ரயில் நிலையத்தின் வழியாக செல்லும் விரைவு ரயில்கள் நிற்காமல் செல்வது வேதனை அளிப்பதாக உள்ளது.

பேராவூரணியிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கானவர்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தியும், மன்னார்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ரயில் நிலையங்கள் சென்று சென்னை செல்லும் நிலை உள்ளது. மற்ற ரயில்களை விட சென்னை செல்லும் பயணிகள் வசதிக்காக தாம்பரம் -செங்கோட்டை விரைவு ரயில் பேராவூரணியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணிகள் வசதிக்காக பயணச்சீட்டு முன்பதிவு மையம் தொடங்க வேண்டும்" என்றனர். ரயில்வே உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி பதிலளித்து பேசுகையில்," விரைவு ரயில் ஒரு ரயில் நிலையத்தில் நின்று செல்ல குறைந்தது 25 பயணிகள் ஏறிச் செல்லவேண்டும். மேலும், ரயில்வே துறை தொடர்பான கோரிக்கை மனுக்களுக்கு பதில் அளிக்க குறைந்த பட்சம் 6 மாதங்கள் ஆகும் என விதியும் உள்ளது.

நிர்வாக ரீதியான முடிவுகளை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எடுக்க முடியாமல் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகள் தான் எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, ஏற்கனவே இது தொடர்பாக பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதால் முதற்கட்டமாக விரைவு ரயில்களை பரிசோதனை முறையில் பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல ஒருமாத காலத்திற்குள் ரயில்வே நிர்வாகத்தை முடிவெடுக்க வலியுறுத்துவது" என தெரிவித்ததையடுத்து மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் வர்த்தக சங்க கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், லயன்ஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள், ரயில் பயணிகள் சங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story