ரயில்வே கேட், மேம்பாலம் அமைக்க வேண்டும்: மேயர் கோரிக்கை

ரயில்வே கேட், மேம்பாலம் அமைக்க வேண்டும்: மேயர் கோரிக்கை

கனிமொழியிடம் மனு 

தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விஎம்எஸ் நகரில் கூடுதலாக 5வது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்க  வேண்டும் என்று திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை விடுத்தார். 

நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி கருணாநிதியிடம் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மனு அளித்தார்.

அதில், தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தூத்துக்குடி விஎம்எஸ் நகரில் கூடுதலாக ஐந்தாவது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சி மையம் எதிரே அரசுக்கு சொந்தமான சுமார் 25 ஏக்கர் நிலத்தில் கருத்தரங்கு, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக சர்வதேச தரத்தில் வர்த்தகம் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் உள்ள பயணிகள் மற்றும் வர்த்தகர்களின் வசதிக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு குளத்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக புதிதாக ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். துறைமுகம், கனநீர் ஆலை, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில், ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்கவும், கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Tags

Next Story