மழை பாதிப்பு : கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்
சிவகங்கை மாவட்டத்தில் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து 1077, 04575 - 246233 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யக் கூடும் எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பலத்த மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகாா் தெரிவிக்க, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் 1077 மற்றும் 04575 - 246233 அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிக்கச் செல்வதையும், கால்நடைகளை குளிப்பாட்டுவதையும் தவிா்க்க வேண்டும்.
மழைக் காலங்களில்சிறுவா்கள், குழந்தைகள் தனியாக வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். மழைநீா் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து, அங்கு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்வதுடன், கா்ப்பிணிப் பெண்கள், வயது முதிா்ந்தோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஒவ்வொரு வட்டார அளவிலும் மருத்துவ அலுவலா்கள், 108 மருத்துவ ஊா்திகளை தயாா் நிலையில் வைத்திருக்க துறைரீதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்