இறுவயலில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

நீலகிரி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை (ஆரஞ்சு அலர்ட்) விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூடலூரை அடுத்த இறுவயல் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்கிறது. கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன பெய்ததன் காரணமாக தொரப்பள்ளியை அடுத்த இறுவயல் பகுதியில் மடை மாறிய ஆற்று வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இறுவயல் வழியாக மயாற்றை அடையும் ஆறு பாடந்துறையில் இருந்து இறுவயல் வரை தூர் வாரப்பட்டுள்ளதாகவும், இறுவயலில் இருந்து வனப்பகுதி வழியாக மாயற்றை அடையும் ஆற்றை தூர்வார வனத்துறை அனுமதிப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து இறுவயல் பகுதி மக்கள் கூறியதாவது இறுவயல் பகுதியில் ஆண்டு தோறும் மழை காலங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுவது வழக்கமனது தான். இப்பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்கிறது. இங்கு கடந்த சில மாதங்கள் வரை பழங்குடியினர் குடியிருப்பு இருந்தது. பழங்குடியினர் இருந்த வரையில் மழை துவங்குவதற்கு முதல்நாளே பழங்குடியினர் குடியிருப்புக்கு வரும் அதிகாரிகள் அவர்கைள மீட்பு முகாம்களுக்கு அழைத்து செல்வார்கள். எங்கைளயும் அழைத்துச் செல்வார்கள். முகாமில் இருப்பவர்கள் எங்களை அத்திப்பட்டியில் இருந்து வருகிறீர்களா என ஏளனம் செய்வார்கள்.

எனவே நாங்கள் எவ்வளவு மழை பெய்தாலும் முகாமுக்கு செல்வதை தவிர்க்கிறோம். இங்கு நாங்கள் 16 குடும்பங்களில் சுமார் 70 பேர் வசித்து வருகிறோம். ஆற்றை ஒட்டியுள்ள 5 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகும் பாேது, பக்கத்தில் இருக்கும் வீட்டில் அடைக்கலம் தேடிக்கொள்கிறாேம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிருந்த பழங்குடியினருக்கு அரசு சார்பில் மாற்று இடத்தில் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டது.

மேலும், பாடந்துறை பகுதியில் இருந்து இறுவயல் வரை இந்த ஆற்றை பொதுப்பணித்துறை சார்பில் அகலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டது. இறுவயல் பகுதியில் இருந்து இந்த ஆறு குறுகலாகி மாயாற்றில் கலக்கிறது. இதை அகலப்படுத்தி தூர்வாறினாலே ஆற்று நீர் வீடுகளுக்குள் புகாது. ஆனால் வனத்துறையினர் ஆற்றை அகலப்படுத்தி தூர்வார அனுமதியளிப்பதில்லை. அடுத்த மழை காலத்திற்குள்ளாவது, வனைத்துறையினர் இறுவயல் ஆற்றை அகலப்படுத்தி தூர்வாறுவார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story