நீலகிரியில் மழை; விவசாய பணிகள் தீவிரம்

நீலகிரியில் மழை; விவசாய பணிகள் தீவிரம்

விவசாய பணிகள் தீவிரம் 

நீலகிரியில் கோடை மழை தீவிரமடைந்துள்ளதால் காய்கறிகள் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம் காட்டுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் 1,33,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலை, 17,000 ஏக்கர் காபி, 2,400 ஏக்கர் பரப்பளவில் மிளகு, 2,000 ஏக்கரில் ஏலக்காய், 15,000 ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் தேயிலை விவசாயத்தில் சுமார் 65,000 பேரும், மலை காய்கறிகள் விவசாயத்தில் சுமார் 10 ஆயிரம் விவசாயிகளும் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் தவிர இதில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் உட்பட மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 2 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்‌. நீலகிரியில் நிலவும் சீதோஷ்ன நிலை மற்றும் மண்தன்மை காரணமாக இங்குள்ள உருளைக்கிழங்கு,

கேரட் மற்றும் வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளுக்கு தனி சுவை இருப்பதால் நாடு முழுவதும் பெரிய வரவேற்பும் விலையும் உள்ளது. நீலகிரியில் ஆண்டிற்கு 3 முறை மலை காய்கறிகளை சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு கோடை மழையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான ஏக்கரில் மலை காய்கறிகளை மற்றும் வெள்ளைப் பூண்டு பயிரிட தேவையான நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டுவந்தனர்.

ஆனால் விவசாயிகள் நினைத்தது போல மழை பெய்யாமல், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு தண்ணீர் இன்றி வறண்டன. இதனால் நீலகிரியில் இந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள 15 ஆயிரம் ஏக்கரில் கிணற்று பாசனம் தவிர மீதி உள்ள 10 ஆயிரம் ஏக்கர் பயிர்களை பாதுகாக்க வழி தெரியாமல் விவசாயிகள் தத்தளித்தனர்.

குறிப்பாக அதிக மலை காய்கறிகளை சாகுபடி செய்யும் முத்தொரை, பாலாடா, கல்லக்கொரை, கப்பத்தொரை, நஞ்சநாடு, பைகமந்து சுற்று வட்டார பகுதிகளில் ஓடும் பாலாடா ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறி பயிர்களை காப்பாற்று விலைக்கு தண்ணீர் வாங்கி பாய்ச்சினர். ஏற்கனவே இருந்த சாகுபடியை காப்பாற்ற தண்ணீர் இல்லாததால்,

கோடை சாகுபடிக்காக நிலத்தை உழுதுவிட்டு, விதைப்பு உள்பட எந்த பணிகளையும் தொடங்காமல் விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமா நீலகிரியில் மழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரியின் வெயில் சீதோசன நிலை மாறி குளிர் வந்து விட்டது. குந்தா, பாலாடா, கல்லட்டி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஊட்டி, குந்தா, கோத்தகிரி, குன்னூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன. விவசாயிகள் நிலத்தில் பூண்டு மற்றும் காய்கறிகள் பயிரிடத் தொடங்கி விட்டனர். வரும் நாட்களில் மழை தீவிரமடையும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Tags

Next Story