அரசு பேருந்துக்குள் மழை: பயணிகள் அவதி

பேருந்துக்குள் பெய்த மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மேலும், இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு அத்திமரப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மேற்கூரையின் வழியாக மழைநீா் பேருந்தின் உள்ளே ஒழுகி இருக்கைகளில் கொட்டியதால், பயணிகள் அவதிக்குள்ளாகினா். ஒரு சிலா் பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணம் செய்தனா். பெரும்பாலானோா் மழையில் நனைந்த படியும், பேருந்துக்குள் ஓரமாக ஒதுங்கி நின்றும் பயணித்துள்ளனா்.
மேலும், ஓட்டுநர் இருக்கையின் மீதும் மழைநீர் ஒழுகியதால் பின்னால் இருந்து பயணி ஒருவர் குடை பிடித்து அவரை நனையாமல் பார்த்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. எனவே பழுதான பேருந்துகளை அகற்றி புதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
