மழைநீர் வடிகால்வாய் மாயம்: களக்காட்டூர்வாசிகள் அதிருப்தி
புதர் மண்டியிலுள்ள இடம்
காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் பெய்யும் மழைநீர், ராமாபுரம் தெரு, மேட்டுத்தெரு, அரசு நடுநிலைப் பள்ளி பின்பக்கம் வழியாக, வேளியூர் ஏரிக்கு செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே மண் துகள்களாலும், செடி, கொடிகளாலும், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்து உள்ளது. இதனால், மழை காலத்தில் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி, சாகுபடி செய்துள்ள பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. மேலும், குடியிருப்புகளை மழைநீர் சூழும் நிலை உள்ளது.
எனவே, களக்காட்டூர் கிராமம், ராமாபுரம் தெருவில் இருந்து வேளியூர் ஏரிக்கு மழைநீர் செல்லும் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி, மண் கால்வாய் உள்ள பகுதியில், கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.