வீடுகளில் புகுந்த மழைநீர்

ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் ஆங்காங்கில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்டது ஆவாரம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் பகுதி.இங்கு கோவில் அருகில் உள்ள ஹரிஜன காலனியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இதில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.நள்ளிரவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
முழங்கால் அளவு தண்ணீர் இருந்த நிலையில் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்களே தண்ணீரை அப்புறப்படுத்தியுள்ளனர். ஹரிஜன காலனி பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும், தேர்தல் நேரத்தில் வரும் பிரதிநிதிகள் அதற்கு பின்பு தங்களை கண்டு கொள்வதே இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காலனியின் அருகில் இருக்கும் ஓடையை தூர் வாரினாலே தண்ணீர் வீடுகளுக்குள் புகாது எனவும் ஆனால் ஓடையை தூர் வாராமல் விட்டதால் தண்ணீர் கழிவு நீருடன் சேர்ந்த வீடுகளுக்குள் புகுந்துவிடுவதாகவும் ஓவ்வொரு முறை மழை பெய்யும் பொழுதும் இதே நிலை தான் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு மழை பெய்ததால் தண்ணீரில் குழந்தைகளுடன் பெரும் சிரமத்திற்கு உள்ளானதாகவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
