பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்
பூந்தமல்லி பஸ் நிறுத்தம் அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம் போல் மழை நீர் தேங்யுள்ளதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
பூந்தமல்லி பஸ் நிறுத்தம் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பூந்தமல்லி சுற்றியுள்ள காடுவெட்டி, மேல் மாநகர், கீழ் மாநகர், ஸ்ரீநகர், கரையான் சாவடி, குமணன்சாவடி, நசரத்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இதனையடுத்து சமீபத்தில் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக இப்பள்ளியில் வளாகத்தில் மழை நீர் செல்ல வழி இல்லாத காரணத்தினால் பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரானது குளம் போல் காட்சி அளிக்கிறது.இதனால் பள்ளிக்குள் சென்று மாணவர்கள் படிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கூறுகையில் மேற்கண்ட பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் பெய்து வரும் சிறிது மழையில் கூட மழை நீர் தேங்கி நின்று விடுகிறது என்றும். இதனால் தாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் வீட்டிலே தங்கி விடுகின்றனர். மேலும் பள்ளி செல்ல முடியாத காரணத்தினால் பாடங்களை கவனிக்க முடியாமல் தேர்வு காலங்களில் மாணவர்கள் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், சில நேரங்களில் தேங்கி நிற்கும் மழை நீரில் விஷ பூச்சிகளும், பாம்புகளும் இருப்பதாகவும் இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அச்சப்படுவதாகவும்,இந்த மழைநீர் செல்ல வைவகை செய்து தர வேண்டும் என பலமுறை பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் மனு அளித்தும், முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் மாணவர்களின் கல்வி பயில்வதில் கடினமாகவும் உள்ளது.
எனவே இந்த பிரச்சனையை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசு கண்டுகொண்டு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றவும் இது போன்ற அவல நிலை மீண்டும் நீடிக்காத வண்ணம் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள், மாணவர்கள் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.