ராமநாதபுரம் விவசாயம் பாதிக்கும் அவலம் !!
விவசாயம் பாதிப்பு
ராமநாதபுரம் பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தில் மின்கம்பங்கள் உடைந்து மின்வயர்கள் தரையோடு தரையாக கிடப்பதால் மின்சாரம் இன்றி கரும்பு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் சீனி கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
ஒரு வருட பயிரை நம்பி ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர். வெங்காளூர் கிராமத்தில் தற்சமயம் கரும்பு அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கரும்பு அறுவடை செய்ய வந்த இயந்திரம் ஒன்று கணேசன் என்பவரின் தோட்டத்தில் இருந்த இரண்டு மின் கம்பங்களை சாய்த்து விட்டு சென்று விட்டது.
இதனால் இரண்டு மின்கம்பங்களும் சேதம் அடைந்து மின் வயர்கள் கரும்பு தோட்டத்தில் தரையோடு தரையாக கிடக்கிறது. இதுகுறித்து விவசாயி கணேசன் கூறுகையில 20 ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு விவசாயம் செய்து வருகிறேன் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை செலவாகிறது. அருகில் இருந்த தோட்டத்திற்கு அறுவடைக்கு வந்த அறுவடை இயந்திரம் மின்கம்பங்களை சேதப்படுத்தி விட்டது.
இதனால் மின்வயர்கள் கரும்பு தோட்டத்தில் தலையோடு தரையாக கிடக்கிறது. இதனால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. கடந்த 20 தினங்களாக கரும்பு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாததால் கரும்பு செடிகள் காய்ந்து வருகிறது. இதனால் போதுமான தண்ணீர் பாய்ச்சாமல் இருப்பதால் அதிகளவு மகசூல் கிடைக்காது. மின்கம்பங்கள் சேதம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சேதம் அடைந்த மின்கம்பங்களை சீரமைத்து கரும்பு தோட்டத்தில் தரையில் கிடக்கும் மின் வயர்களை அகற்றி முறையான மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெங்காளூர் விவசாயிகள் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.