ராமநாதபுரம்: விவசாயிக்கு விருது

ராமநாதபுரம் கமுதி இயற்கை விவசாயி ராமர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மில்லியனேரி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், இந்த ஆண்டு முதல் நாட்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு மில்லியனேரி விருது வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் 19 விவசாயிகள் தேர்வுபெற்றனர். இதில் கமுதி கோரைபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமரும் ஒருவர். இவரும், இவருடன் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழு இயற்கை விவசாயிகளும் ரூ.75 லட்சம் அளவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த விருதுவழங்கும் விழா டெல்லியில் டிச.6-ம் தேதி நடக்கிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து இயற்கை விவசாயி ராமர் கூறுகையில், மத்திய அரசின் விருது என்னை போன்றவர்களை ஊக்குவிக்கும் என்றார். மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் வள்ளல் கண்ணன் கூறும்போது, மாவட்டத்தில் 5 விவசாயிகளை விருதுக்கு பரிந்துரைத்தோம். அதில் இயற்கை விவசாயி ராமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றார்.

Tags

Next Story