ராமநாதபுரம் நகரப்பேருந்து இயக்க கோரிக்கை !

ராமநாதபுரம் நகரப்பேருந்து இயக்க கோரிக்கை !

நகரப்பேருந்து இயக்க கோரிக்கை

ராமநாதபுரம் சாயல்குடி அருகே ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அரசுப்பள்ளி மாணவர்கள். நகரப்பேருந்து இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சாயல்குடியில் செயல்படும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். உள்ளூர் தவிர சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். கரிசல்குளம், நோம்பக்குளம், பிள்ளையார்குளம், காணிக்கூர், வெள்ளம்பல், மணிவலை, அல்லிக்குளம், கூரான்கோட்டை மற்றும் குக்கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளி வந்து செல்ல போக்குவரத்து வசதியில்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஷேர் ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய அவலம் தொடர்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலரான முகமது ரபீக் கூறும்போது, "கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கிராமபுற போக்குவரத்து வசதிக்காக சாயல்குடியில் பேருந்து பணிமனை அமைப்பதற்கென நிலம் கையகப்படுத்தப்பட்டு அன்றைய திமுக அரசில் அங்கம்வகித்த 5 அமைச்சர்களைக் கொண்டு அடிக்கல் நட்டினார்கள். அத்தோடு சரி அதன்பின் அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஒருவேளை தற்போதைய அரசு பணிமனை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி பேருந்து பணிமனை அமைத்து நகரப்பேருந்து இயக்கினால் பள்ளிக்கு படிக்கவரும் மாணவர்கள் மட்டுமல்ல சாயல்குடியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களும் பயன்பெறுவார்கள். பள்ளி மாணவர்களும் பாதுகாப்பாக வந்து செல்வார்கள" என்றார். மாணவர்கள் பாதுகாப்பாக அச்சமின்றி கல்வி கற்க அரசு அனைத்து ஏற்பாடுகளையும் துரிதப்படுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story