ராமநாதபுரம் மீனவ மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகை

தங்கச்சி மடம் அடுத்த மீனவ கிராமத்தில் மின் வெட்டை கண்டித்தும், மின்மாற்றியை மாற்றி தரக் கோரியும் மின்துறை செயற்பொறியாளரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் தங்கச்சிமடம் அடுத்த தண்ணீர் ஊற்று மீனவ கிராமத்தில் தொடர் மின்வெட்டு கண்டித்தும் மின்மாற்றியை (டிரான்ஸ்பார்மர்) மாற்றி தரக்கோரி மின்மாற்றிக்கு சமாதி கட்டி அப்பகுதி மீனவ மக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அடுத்து தண்ணீர் ஊற்று கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தண்ணீர் ஊற்று கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தண்ணீர் ஊற்று மீனவ கிராமத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்ட வருவதுடன், அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள மின்மாற்றிலிருந்து (டிரான்ஸ்பார்மர்) 100 கிலோ வாட் மின்சாரம் சப்ளை செய்யப்படுவதால் சீரான மின்சாரம் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இந்த சீரற்ற மின்சார விநியோகம் காரணமாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் வீடுகளில் வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர் மேலும் மிக்ஸி கிரைண்டர் வாஷிங் மெஷின் பிரிட்ஜ் உள்ளிட்டவைகளும் பழுதடைந்துள்ளது.

இது குறித்து பலமுறை ராமேஸ்வரம் மின்துறை செயற்பொறியாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் இன்று அங்கிருந்த மின்மாற்றிக்கு சமாதி கட்டி ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து தண்ணீர் ஊற்று கிராமத்திற்கு வந்த மின்துறை செயற்பொறியாளரை முற்றுகையிட்டு அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தண்ணீர் ஊற்று மீனவ கிராமத்தில் உள்ள மின் மாற்றி உடனடியாக மாற்றி தர வேண்டும் எனவும் மின்மாற்றிலிருந்து தற்போது சப்ளை செய்யப்பட்டு வரும் 100 கிலோவாட் மின்சாரத்தை 250 கிலோ வாட்டாக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து தொடர் சாலை மறிய போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி தலைமையில் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அப்பகுதி மக்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

Tags

Next Story