ராமநாதபுரம்: கடற்கரையில் புதைந்து கிடந்த ஜெலட்டின்கள் -இருவருக்கு வலை

ராமநாதபுரம்: கடற்கரையில் புதைந்து கிடந்த ஜெலட்டின்கள் -இருவருக்கு வலை

கைப்பற்றப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்

தொண்டி அருகே கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 88 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த மரைன் போலீஸார் தப்பி ஓடிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருப்பாலைக்குடி, எம். ஆர்.பட்டினம், எஸ். பி.பட்டினம், நம்புதாளை, சோழியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப் படகில் மீனவர்கள் அதிக அளவு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் அதிக மின் விளக்கு ஒளியை பாய்ச்சி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வெடிபொருட்களான ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி கடலில் வெடிவைத்து மீன் பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொண்டி அடுத்த நாரேந்தல் மீனவ கிராம கடற்கரையில் இருவர் சட்டவிரோதமாக ஜெலட்டின் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தொண்டி மரைன் சார்பு ஆய்வாளர் அய்யனார் தலைமையில் காவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் கூட்டாக மீனவ கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரை ஓரத்தில் மணலில் புதைத்து வைத்திருந்த சாக்கு பையை பிரித்து பார்த்த போது அதில் சுமார் 88 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் 50 மீட்டர் திரி உள்ளிட்டவைகள் இருந்தது தெரிய வந்தது. வெடி பொருட்களை பறிமுதல் செய்த மரைன் போலீசார் சட்டவிரோதமாக வெடி பொருட்களை பதுக்கி வைத்து தப்பி ஓடிய தொண்டி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் தொண்டி போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 100 கிலோ கஞ்சா சரக்கு வாகனத்துடன் பிடிபட்டு தப்பியோடியவர்களை தேடிவரும் நிலையில் இந்த சட்டவிரோத சம்பவமானது நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து நடைபெறும் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் கவாச் போன்ற ஒத்திகைகளை கைவிட்டு மிகத் தீவிர ரோந்து பணியில் போலீஸார் ஈடுபடவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story