ராமநாதபுரம் வழக்கறிஞர்களை தாக்கிய திருநங்கைகளால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகள் இணைந்து வழக்கறிஞர் ஒருவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்திப்பதற்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆட்சியர் அலுவலக வளாகங்களில் அமர்ந்திருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த வழக்கறிஞர் திருநங்கைகளை உட்கார்ந்து இருப்பதை பார்த்து அவர்களை ஒருமையில் பேசி உங்களை பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் வழக்கறிஞர் தர்மரை செருப்பு மற்றும் கையால் சரமாரியாக விரட்டி விரட்டி தாக்கினர். அடி தாங்க முடியாத வழக்கறிஞர் திருநங்கைகளிடம் இருந்து தப்பி கடைக்குள் செல்ல முயன்றார் .ஆனால் திருநங்கைகள் தொடர்ந்து தாக்கினர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வழக்கறிஞர் தர்மரை மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இருப்பினும் தொடர்ந்து திருநங்கைகள் துரத்தி துரத்தி துரத்தி வளாகத்துக்குள் அடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திருநங்கைகளை அழைத்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான அடிப்படை வசதி செய்து தருவதாகவும், திருநங்கைகளை ஒருமையில் பேசி வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததாக திருநங்கைகள் தெரிவிக்கின்றனர். மேலும் திருநங்கைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத பட்சத்தில் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.