ராமநாதபுரம் முத்துமாரியம்மன் பங்குனி திருவிழா

கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன்கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் வருடா வருடம் நடைபெறும் பங்குனித் திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா மாநிலம் நகரி, புத்தூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இந்த வருட பங்குனித் திருவிழா கடந்த மாதம் முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் துவங்கியது.

பின்னர் நேற்று முன்தினம் இரவு மேளதாளங்களுடன் பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை மேளதாளங்களுடன் கொடிபட்டம் வாங்கி வரும் நிகழ்ச்சியும், பின்னர்அம்மன் சிலைக்கு எதிரே உள்ளகொடிமரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு, அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சந்தனம், பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட ஏராளமான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. நேர்த்தி கடன் செய்யும் பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை துவங்கினர்.

இவ்விழாவில், நாடார் உறவின்முறை டிரஸ்டிகள், நிர்வாகிகள் மற்றும் கமுதி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் இரவு கும்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும், 27-ம் தேதிஅக்னிசட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல்,தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத பக்தர்கள் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி வினோத நேர்த்திக்கடன் செலுத்துதல்நடைபெற உள்ளது.விழாவின் கடைசி நாளான மார்ச் 30-ம் தேதி சனிக்கிழமை குண்டாற்றில் முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

16 -நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினமும் முத்து மாரியம்மன் வெள்ளிக் குதிரை, யானை, சிம்மம், கண்ணாடிசப்பரம்,காமதேனு, ரிஷபம், உட்பட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை க்ஷத்திரிய நாடார்உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.இதேபோல் கமுதி சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான கோவில்களில் நேற்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

Tags

Next Story