ராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா
ராமநாதபுரம் கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் வருடா வருடம் நடைபெறும் பங்குனித் திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் ஆந்திரா மாநிலம் நகரி, புத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இந்த வருட பங்குனித் திருவிழாவின் துவக்கமாக முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. கோவிலின் வடக்கு வாசல் முன்பு, முகூர்த்தகால் நடப்பட்டு, அதற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனித் திருவிழாவில், நேர்த்திக் கடன் செய்பவர்கள் இந்நாளில் இருந்து அசைவ உணவு களை தவிர்த்து விரத நெறிமுறைகளை கடைபிடிப்பார்கள். மேலும் வரும் மார்ச் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் மார்ச் 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும், 27-ம் தேதி அக்னிசட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், உடல் முழுவதும் சேறு பூசி வழிபடும் வினோத திருவிழா நடைபெற உள்ளது.விழாவின் கடைசி நாளான மார்ச் 30-ம் தேதி சனிக்கிழமை குண்டாற்றில் முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 16 -நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினமும் முத்து மாரியம்மன் வெள்ளிக் குதிரை, யானை சிம்மம், கண்ணாடிசப்ரம், காமதேனு, ரிஷபம், உட்பட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை க்ஷத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.
Next Story