ராமநாதபுரம்; சாலை விபத்தில் ஒருவர் பலி
சாயல்குடி அருகே நடந்த சாலை விபத்தில் பாதயாத்திரை பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் நரிப்பையூர், புதுக்கிராமம் இசக்கி அம்மன் கோவில் அருகில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கிய ஓட்டுநர் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோட்டூர் முத்தலாபுரத்தை சேர்தவர் முனியாண்டி மகன் ராஜலிங்கம்.
கண்டெய்னர் டிரைவரான இவர், தூத்துக்குடியிலிருந்து அதிகாலையில் டைல்ஸ் ஏற்றிக்கொண்டு சாயல்குடி நோக்கி வரும்போது நரிப்பையூரை அடுத்த புதுக்கிராமம் பகுதியில் எதிரே வந்த தண்ணீர் லாரி அந்த வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற மேலத்தூவல் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் சுந்தரம் (55) மீது மோதி நிலைதடுமாறிய நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கண்டெய்னர் லாரிமீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கண்டெய்னர் ஓட்டிவந்த ராஜலிங்கம் டிரைவர் கேபினில் சிக்கிக்கொண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து படுகாயம் அடைந்த சுந்தரத்தை மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் அவர் பரிதாபமாக பலியானார். கண்டெய்னருக்குள் சிக்கிய டிரைவரை மீட்க முடியாததால் சாயல்குடி தீயணைப்பு மீட்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக நிலைய அலுவலர் முத்து தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். மேலும் தண்ணீர் வண்டியை ஓட்டி வந்தவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சாயல்குடி காவல் ஆய்வாளர் முகமது எர்ஷாத், சார்பு ஆய்வாளர் சல்மோன் மற்றும் காவலர்கள் விசாரித்து வருகிறார்கள்.