ராமநாதபுரம் பங்குனி பொங்கல் திருவிழா !

ராமநாதபுரம் பங்குனி பொங்கல் திருவிழா !

நேர்த்திக்கடன்

கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் இன்று 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள்உடல் முழுவதும் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில்,பக்தர்கள் உடல் முழுவதும் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர். கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குதிரை,யானை,காமதேனு, ரிஷபம் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. தினமும் பொதுமக்களுக்கு சுண்டல் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். திருவிழாவின் முக்கிய நாளான நேற்று கோவிலின் முன்பு ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் நேற்று நள்ளிரவு முதல் ஏராளமானபக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்த துவங்கினர். கோவிலில் உருண்டு கொடுக்கும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள்,ஆண்கள்,சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது உடல் முழுவதும் களி மண் சேறு பூசிக் கொண்டு, கையில் வேப்பிலையுடன் கோவிலை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தமிழகத்தில் வேறு எங்கும் இந்த நேர்த்திக் கடன் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. 11 நாட்கள் விரதமிருந்து பக்தர்கள் கமுதியில் உள்ள ஊரணி கரையில் உள்ள களிமண் சேற்றை குழைத்து தலை முதல் கால் வரை அடையாளம் தெரியாத அளவிற்கு பூசி கமுதி முழுவதும் உள்ள கோவிலுக்கு சென்று இறுதியில் முத்துமாரியம்மன் கோவில் சென்று வழிபட்டு செல்கின்றனர் .களிமண் சேறு குளிர்ச்சியானது என்பதால் உடல் முழுவதும் குளிர்ச்சியாக இருக்கவும் கோடை காலத்தில் வரும் வேர்க்குரு, கட்டி,அம்மை போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க கமுதி பகுதியில் உள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்வமுடன் சேத்தாண்டி வேடம் போட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர். இதனால் கமுதி முழுவதும் களிமண் மனிதர்களாகவே காட்சியளித்தனர். களிமண்ணுக்கு இயற்கையாகவே நீரை உறிஞ்சும் குணம் இருப்பதால் உடல் முழுவதும் பூசும்போது வியர்வைக்கண் அடைப்புகள் நீங்கி வியர்வை வெளியேறுவதால் உடல் குளிர்ச்சியாகும், இதனால் கோடைகால நோய்கள் வராது என்பதால் சேத்தாண்டி வேடம் போட வருட வருடம் பக்தர்கள் என்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது . தற்போது வெளிநாடுகளில் களிமண் குளியல் போல கமுதியிலும் அறிவியல் கலந்த ஆன்மீக முறைப்படி இந்த நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்கினிச்சட்டி, பூப்பெட்டி, பால்குடம் , 101 சட்டி, 51 சட்டி, நாக்கில் வேல் குத்துதல் என தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். நூற்றுக்கணக்கானோர் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். சென்னை, நகரி, காரைக்குடி, என தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இத்திருவிழாவை காண வந்துள்ளனர்.தினமும் இரவு முத்துமாரியம்மன் கோவில் திடல் முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை க்ஷத்திரிய நாடார் உறவின் முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story