ராமநாதபுரம் பங்குனி உத்திர திருவிழா
பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் 84 வது பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வழி விடு முருகன் ஆலயத்தில் 84 வது பங்குனி உத்திர பெருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டப்பட்டு இன்று சிறப்பாக பங்குனி உத்திரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராமநாதபுரம் நொச்சிவயல் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி, வேல் காவடி, பறவை காவடி, சப்பர காவடிகளை எடுத்து பெரியார் நகர், அரண்மனை, வண்டிக்கார தெரு வழியாக ராமநாதபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வழி விடு முருகன் ஆலயத்திற்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இதற்காக ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை ஸ்ரீ வழி விடு முருகன் ஆலயத்தின் முன்பாக பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story